Thirukural 684 of 1330 - திருக்குறள் 684 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

Translation:

Sense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy's task is fit.

Explanation:

He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

கலைஞர் உரை:

தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.


[ads-post]

மு. உரை:

இயற்கை அறிவு, விரும்பத்தக்கத் தோற்றம், ஆராய்ச்சி உடையக் கல்வி ஆகிய இம் மூன்றின் பொருத்தம் உடையவன் தூது உரைக்கும் தொழிலுக்குச் செல்லலாம்.

சாலமன் பாப்பையா உரை:

இயல்பான நல்லறிவு, காண்பவர் விரும்பும் தோற்றம், பலரோடும் பலகாலமும் ஆராய்ந்த கல்வி இம்மூன்றையும் நிறையப் பெற்றுச் சொல்ல வேண்டியதைத் தானே எண்ணிச் சொல்லும் திறம் படைத்தவன் தூதர் பணிக்குச் செல்க.

மணக்குடவர் உரை:

அறிவும், வடிவும், தெரிந்த கல்வியுமாகிய இம் மூன்றினது அடக்கமுடையவன் வினைக்குச் செல்க. அறிவு- இயற்கையறிவு.

பரிமேலழகர் உரை:

அறிவு - இயற்கையாகிய அறிவும்; உரு - கண்டார் விரும்பும் தோற்றப்பொலிவும்; ஆராய்ந்த கல்வி - பலரோடு பலகாலும் ஆராயப்பட்ட கல்வியும் என; இம்மூன்றன் செறிவு உடையான் - நன்கு மதித்தற்கு ஏதுவாய இம்மூன்றனது கூட்டத்தை உடையான்; வினைக்குச் செல்க-வேற்று வேந்தரிடைத் தூது வினைக்குச் செல்க. (இம்மூன்றும் ஒருவன்பாற் கூடுதல் அரிது ஆகலின், 'செறிவுடையான்'என்றார். இவற்றான் நன்கு மதிப்புடையனாகவே, வினை இனிது முடியும் என்பது கருத்து.)


Thirukural 683 of 1330 - திருக்குறள் 683 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

Translation:

Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.

Explanation:

To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign).

கலைஞர் உரை:

வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.

[ads-post]

மு. உரை:

அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.

மணக்குடவர் உரை:

எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.

பரிமேலழகர் உரை:

வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - வேலையுடைய வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல் வல்லன் ஆகுதல் - நீதி நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை இரண்டும் அடங்க 'வென்றி வினை' என்றும் கூறினார். வல்லனாதல்: உணர்வு மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)


Thirukural 682 of 1330 - திருக்குறள் 682 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

Translation:

Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.

Explanation:

Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador.

கலைஞர் உரை:

தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை.

[ads-post]

மு. உரை:

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அன்பு நாட்டிற்கு நல்லது அறியும் அறிவு, அடுத்தவரிடம் பேசும்போது தேர்ந்து எண்ணிச் சொல்லும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூதர்க்கு இன்றியமையாதன.

மணக்குடவர் உரை:

அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.

பரிமேலழகர் உரை:

அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று. (ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.)
Powered by Blogger.