திருவள்ளுவ மாலை 31 - 35 of 55 பாடல்கள்

திருவள்ளுவ மாலை 31 - 35 of 55 பாடல்கள்


உருத்திர சன்ம கண்ணர்

31. மணற்கிளைக்க நீரூறு மைந்தர்கள் வாய்வைத்
துணச்சுரக்குந் தாய்முலை யொண்பால் - பிணக்கிலா
வாய்மொழி வள்ளுவர் முப்பான் மதிப்புலவோர்க்
காய்தொறு மூறு மறிவு.

விளக்கவுரை :

நீர்நிலை யடுத்த மணலைத் தோண்டுந்தோறும் நீரூறும். குழந்தை வாய்வைத் துறிஞ்சுந்தோறும் தாய்முலை சுரக்கும். அவைபோல், திருக்குறளை ஆராயுந்தோறும் அறிவு பெருகும்.

பெருஞ்சித்திரனார்

32. ஏதமில் வள்ளுவ ரின்குறள்வெண் பாவினா
லோதிய வொண்பொரு ளெல்லா- முரைத்ததனாற்
றாதவிழ் தார்மாற தாமே தமைப்பயந்த
வேதமே மேதக் கன.

விளக்கவுரை :

மாலையணிந்த பாண்டிய வேந்தே! திருவள்ளுவர் வேதங்களின் சிறந்தபொருளை யெல்லாம் குறள்வெண்பாவாற் கூறிவிட்டமையால், இவற்றுள் எவை மேம்பட்டவை?

[ads-post]







நரிவெரூஉத் தலையார்

33. இன்பம் பொருளறம் வீடென்னு மிந்நான்கு
முன்பறியச் சொன்ன முதுமொழிநூன்- மன்பதைகட்
குள்ள வரிதென் றவைவள் ளுவருலகங்
கொள்ள மொழிந்தார் குறள்.

விளக்கவுரை :

நாற்பொருளையும் மக்கட்கு அறிவிக்கும்படி இயற்றப்பட்ட நால் வேதங்கள் அவரால் உணர்தற்கு அரியதாயிருந்ததனால், அவற்றை யெளிதா யுணருமாறு திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.

மதுரைத்தமிழாசிரியர் செங்குன் றூர்கிழார்

34. புலவர் திருவருள் ளுவரன்றிப் பூமேற்
சிலவர் புலவரெனச் செப்பல் - நிலவு
பிறங்கொளிமா லைக்கும் பெயர்மாலை மற்றுங்
கறங்கிருண்மா லைக்கும் பெயர்.

விளக்கவுரை :

திருவள்ளுவரையும் பிற புலவரையும் புலவரென்று சமமாகச் சொல்லுதல், முழுமதி மாலையையும் காருவா அமாவாசை மாலையையும் மாலையென்றே ஒரே சொல்லாற் குறிப்பது போலும்.

மதுரை யறுவை வாணிகன் இளவேட்டனார்

35. இன்பமுந் துன்பமு மென்னு மிவையிரண்டு
மன்பதைக் கெல்லா மனமகிழ- வன்பொழியா
துள்ளி யுணர வுரைத்தாரே யோதுசீர்
வள்ளுவர் வாயுறை வாழ்த்து.

விளக்கவுரை :

மக்களெல்லாரும் தமக்கு வரும் இன்பதுன்பக்கரணியங்களை யறிந்து துன்பத்தினின்று தப்பி யின்புறும்பொருட்டு, திருவள்ளுவர் திருக்குறளை வாயுறை வாழ்த்தாகப்பாடினார். வாயுறை வாழ்த்தாவது, முன்பு வெறுப்பை விளைப்பினும் பின்பு நலம் பயக்கும் நன் மருந்துபோற் பயன்படும் அறிவுரை வாயுறுத்தும் மருந்து.

திருவள்ளுவர், திருவள்ளுவமாலை, thiruvalluvar, thiruvalluvamalai, valluvar