Showing posts with label உழவு - FARMING. Show all posts


Thirukural 1040 of 1330 - திருக்குறள் 1040 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : உழவு.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

Translation:

The earth, that kindly dame, will laugh to see,
Men seated idle pleading poverty.

Explanation:

The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.

கலைஞர் உரை:

வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

[ads-post]

மு. உரை:

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

சாலமன் பாப்பையா உரை:

நிலமகள் என்னும் நல்ல பெண், நாம் ஏதும் இல்லாத ஏழை என்று சோம்பி இருப்பவரைக் கண்டால் தனக்குள் ஏளனமாய்ச் சிரிப்பாள்.

மணக்குடவர் உரை:

பொருளிலோமென்று சோம்பி இரப்பாரைக் கண்டால் நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும். இது நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்குமென்றது.

பரிமேலழகர் உரை:

இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும். (உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)


Thirukural 1039 of 1330 - திருக்குறள் 1039 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : உழவு.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

Translation:

When master from the field aloof hath stood;
Then land will sulk, like wife in angry mood.

Explanation:

If the owner does not (personally) attend to his cultivation, his land will behave like an angry wife and yield him no pleasure.

கலைஞர் உரை:

உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.

[ads-post]

மு. உரை:

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

நிலத்திற்கு உரியவன் நாளும் நிலத்திற்குச் சென்று செய்ய வேண்டியதைச் செய்யாது சோம்பி இருந்தால், கடமை ஆற்றாத கணவனை முதலில் மனத்தால் வெறுத்துப் பின் அவனோடு ஊடி விடும் மனைவியைப் போல நிலமும் முதலில் வாடிப் பிறகு பலன் தராமல் போய்விடும்.

மணக்குடவர் உரை:

நிலத்திற்கு உரியவன் நாடோறும் அந்நிலத்தின்பாற் செல்லாது மனையகத்திருப்பானாயின், அது தான் செல்லாமையாற் புலந்த இல்லாளைப் போலப் புலந்துவிடும். இது நாடோறுஞ் சென்று பார்க்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:

கிழவன் செல்லான் இருப்பின் - அந்நிலத்திற்குரியவன் அதன்கண் நாள்தோறும் சென்று பார்த்து அடுத்தன செய்யாது மடிந்திருக்குமாயின்; நிலம் இல்லாளின் புலந்து ஊடிவிடும் - அஃது அவன் இல்லாள் போலத் தன்னுள்ளே வெறுத்துப்பின் அவனோடு ஊடிவிடும். (செல்லுதல் - ஆகுபெயர். பிறரை ஏவியிராது தானே சேறல் வேண்டும் என்பது போதர, 'கிழவன்' என்றார். தன்கண் சென்று வேண்டுவன செய்யாது வேறிடத்திருந்தவழி மனையாள் ஊடுமாறுபோல என்றது அவன் போகம் இழத்தல் நோக்கி. இவை மூன்று பாட்டானும் அது செய்யுமாறு கூறப்பட்டது.)


Thirukural 1038 of 1330 - திருக்குறள் 1038 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : உழவு.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

Translation:

To cast manure is better than to plough;
Weed well; to guard is more than watering now.

Explanation:

Manuring is better than ploughing; after weeding, watching is better than watering (it).

கலைஞர் உரை:

உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.

[ads-post]

மு. உரை:

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை:

உழுவதைக் காட்டிலும் உரம் இடுவது நல்லது; நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும் களை எடுத்தபிறகு பயிரைக் காவல் செய்வது நல்லது.

மணக்குடவர் உரை:

உழுகின்றதினும் நன்றாம் எருவிடுதல்; களை கட்டபின்பு நீர் விடுதலினும் நன்றாம் அதனை அழியாமற் காத்தல். இது பல்கால் உழவு வேண்டுமென்பதூஉம் எருவிட வேண்டும் மென்பதூஉம், களைபறிக்க வேண்டுமென்பதூஉம் பசுப்புகுதாமற் காக்க வேண்டுமென்பதூஉம் கூறிற்று.

பரிமேலழகர் உரை:

ஏரினும் எரு இடுதல் நன்று - அப்பயிர்க்கு அவ்வுழுதலினும் எருப்பெய்தல் நன்று; கட்ட பின் அதன் காப்பு நீரினும் நன்று - இவ்விரண்டும் செய்து களை கட்டால் அதனைக் காத்தல் அதற்கு நீர்கால் யாத்தலினும் நன்று. (ஏர் - ஆகுபெயர், காத்தல், பட்டி முதலியவற்றான் அழிவெய்தாமல் காத்தல். உழுதல், எருப்பெய்தல், களை கட்டல், நீர்கால் யாத்தல், காத்தல் என்று இம்முறையவாய இவ்வைந்தும் வேண்டும் என்பதாம்..)
Powered by Blogger.