திருவள்ளுவ மாலை – நூல் அறிமுகம்

திருவள்ளுவ மாலை – நூல் அறிமுகம்


இப்பாடற்றிரட்டு கடைக் கழகப் புலவராற் பாடப்பட்டதன்று. பிற்காலத்து ஆரியச்சார்பான ஒருவரோ ஒரு சிலரோ அவர்பெயரிற் பாடிவைத்ததாகும் இதற்குச் சான்றுகள்:-

1. உடம்பிலி (அசரீரி) யுரையும் நாமகள் கூற்றும் இறைவன் பாராட்டும் என்று முப்பாக்கள் கலந்திருத்தல்.

2.இறையனாரகப் பொருளுரைக் கட்டுக் கதையிற் கூறப்பட்டுள்ள உருத்திரசன்மன் என்னும் ஐயாட்டை மூங்கைப் பிராமணச் சிறுவன், திருவள்ளுவரோடு ஒக்கவிருக்கவென்று வானுரையெழுந்ததாகக் கூறப்பட்டிருத்தல்.

3. இத்திருவள்ளுவமாலைப் பாடகராகக் குறிக்கப்பட்டவருட் பலர் திருவள்ளுவர் காலத்தவராக இருத்தல்.

4. திருக்குறள் ஆரியவேத வழிப்பட்டதாகப் பல பாட்டுக்கள் கூறுதல்.

5. பாக்களின் நடை பெரும்பாலும் பிற்காலத்த தாக விருத்தல்.

[ads-post]

6. உருத்திரசர்மன் என்னும் இயற்பெயர் உயர்வுப்பன்மை வடிவிற் குறிக்கப்பட்டிருத்தல்.

7. நல்கூர்வேள்வியார் பெயரிலுள்ள பாவில் மாதாநுபங்கி என்னும் ஒரு பொருளற்ற வடசொல் ஆளப்பட்டிருத்தல்.

8. சில பாக்களில் திருவள்ளுவர் கருத்திற்கு மாறாகப் பிராமணரை அந்தணரென்று குறித்திருத்தல்.

குறிப்புகள்:

1. இத் திருவள்ளுவ மாலை கடைக்கழகப் புலவரால் பாடப் பட்டதன்றாயினும் பலபாக்களிலுள்ள கருத்துக்கள் சிறந்தனவும் நடுநிலையானவும் மேற்கோளாக ஆளத்தக்கனவுமாக உள்ளன.

2. சில பாக்கள் அவற்றைப் பாடியவரின் அளவிறந்த ஆரிய வெறியையோ அடிமைத் தனத்தையோ காட்டுவனவாக வுள்ளன.

3. சிலபாக்கள் அளவிறந்த உயர்வுநவிற்சியாகவுள்ளன.

4. சிலபாக்கள் நூலின் பாகுபாட்டையே எடுத்துக்கூறுவன.

திருவள்ளுவர், திருவள்ளுவமாலை, thiruvalluvar, thiruvalluvamalai, valluvar