குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
Translation:
Mighty in lore amongst the learned must he
be,
Midst jav'lin-bearing kings who speaks the
words of victory.
Explanation:
To be powerful in politics among those who
are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing
kings on matters of triumph (to his own sovereign).
கலைஞர் உரை:
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும்.
மணக்குடவர் உரை:
எல்லா நூல்களையும் கற்றார்முன்னர்
அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய
வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.
பரிமேலழகர் உரை:
வேலாருள் வென்றி வினை உரைப்பான்
பண்பு - வேலையுடைய
வேற்றரசரிடைச் சென்று தன் அரசனுக்கு வென்றி தரும் வினையைச் சொல்லுவானுக்கு
இலக்கணமாவது; நூலாருள்
நூல் வல்லன் ஆகுதல் - நீதி
நூலையுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்லனாதல். ('கோறல் மாலையர்' என்பது தோன்ற 'வேலார்' என்றும், தூது வினை
இரண்டும் அடங்க 'வென்றி
வினை' என்றும்
கூறினார். வல்லனாதல்: உணர்வு
மாத்திரமுடையராய அவர் முன் வகுக்கும் ஆற்றல் உடையனாதல்.)