போக்கியார்
26. அரசிய லையைந் தமைச்சிய லீரைந்
துருவல் லரணிரண்டொன் றொண்கூ - ழிருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்
றெண்பொரு ளேழா மிவை.
விளக்கவுரை :
திருக்குறளின் பொருட்பால், அரசியல் இருபத்தைந் ததிகாரமும், அமைச்சியல் பத்ததிகாரமும், அரணியல் ஈரதிகாரமும் பொருளியல் ஓரதிகாரமும், படையியல் ஈரதிகாரமும் நட்பியல் பதினேழதிகாரமும்; குடியியல் பதின்மூன்றதிகாரமுமாக ஏழுபகுதிகளையுடையதாம்.
மோசிகீரனார்
27.ஆண்பாலே ழாறிரண்டு பெண்பா லடுத்தன்பு
பூண்பா லிருபாலோ ராறாக - மாண்பாய
காமத்தின் பக்கமொரு மூன்றாகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனார் நன்கு.
விளக்கவுரை :
திருவள்ளுவர் ஆண்பாற்கூற்று ஏழதிகாரமும் பெண்பாற் கூற்றுப் பன்னீரதிகாரமும் இருபாற் கூற்று ஆறதிகாரமுமாக, இன்பத்துப்பாலை மூன்றாக வகுத்துரைத்தார்.
[ads-post]
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
28. ஐயாறு நூறு மதிகார மூன்றுமா
மெய்யாய வேதப் பொருள்விளங்கிப் - பொய்யாது.
தந்தா னுலகிற்குத் தான்வள் ளுவனாகி
யந்தா மரைமே லயன்.
விளக்கவுரை :
நான்முகன் திருவள்ளுவனாகி வடமொழி வேதப் பொருளைத் தமிழில் 133 அதிகாரமாக விளக்கிக் கூறினான்.
மதுரைத் தமிழ் நாகனார்
29. எல்லாப் பொருளு மிதன்பா லுளவிதன்பா
லில்லாத வெப்பொருளு மில்லையாற் - சொல்லாற்
பரந்தபா வாலென் பயன்வள் ளுவனார்
சுரந்தபா வையத் துணை.
விளக்கவுரை :
எல்லாப் பொருளும் இதன்கண் உள. இதில் இல்லாத பொருள் ஒன்றுமில்லை. ஆதலால், உலகத்தார்க்கு இவ்வொரு நூலே போதுமானதாம்.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
30. எப்பொருளும் யாரு மியல்பி னறிவுறச்
செப்பிய வள்ளுவர்தாஞ் செப்பவரு - முப்பாற்குப்
பாரதஞ்சீ ராம கதைமனுப் பண்டைமறை
நேர்வனமற் றில்லை நிகர்.
விளக்கவுரை :
எல்லாப்பொருளையும் எல்லாரும் உள்ளவாறறியுமாறு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட்குப், பாரதம், இராமாயணம் மனுதருமசாத்திரம், நால் வேதம் ஆகிய நான்கே ஒப்பாம்.