திருவள்ளுவ மாலை 21 - 25 of 55 பாடல்கள்

திருவள்ளுவ மாலை 21 - 25 of 55 பாடல்கள்


நல்கூர்வேள்வியார்

21. உப்பக்க நோக்கி யுபகேசி தோண்மணந்தா
னுத்தர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்க
மாதாநு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு

விளக்கவுரை :

வட மதுரைக்குக் கண்ணனை நிலைக்களமாகக் கூறுவர்; வைகை மதுரையான தென்மதுரைக்குத் திருவள்ளுவர் நிலைக்களமாவார்.

தொடித்தலை விழுத்தண்டினார்

22. அறநான் கறிபொரு ளேழொன்று காமத்
திறமூன் றெனப்பகுதி செய்து-பெறலரிய
நாலு மொழிந்தபெரு நாவலரே நன்குணர்வார்
போலு மொழிந்த பொருள்.

விளக்கவுரை :


அறத்தைப் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்காகவும், பொருளை அரசு. அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி என ஏழாகவும், இன்பத்தை ஆண்பாற் கூற்று, பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று என மூன்றாகவும் வகுத்து, நாற்பொருளையுங் கூறிய திருவள்ளுவரே வேருபொருளிருப்பினும் அதையறிவார் போலும்! நாடு அரணுள் அடக்கப்பட்டது.

[ads-post]

வெள்ளிவீதியார்

23. செய்யா மொழிக்குந் திருவள் ளுவர்மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருளொன்றே-செய்யா
வதற்குரிய ரந்தணரே யாராயி னேனை
யிதற்குரிய ரல்லாதா ரில்

விளக்கவுரை :

ஒருவராலும் இயற்றப் படாத வேதமும் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் கூறும் பொருள் ஒன்றே. இவற்றுள் முன்னது பிராமணர்க்கே யுரியது; பின்னதோ எல்லார்க்கும் பொதுவாம்.

மாங்குடி மருதனார்

24. ஓதற் கெளிதா யுணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கித் - தீதற்றோ
ருள்ளாதோ றுள்ளுதோ றுள்ள முருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

விளக்கவுரை :


திருவள்ளுவரின் திருவாய்மொழி, படிப்பதற் கெளிதாயும் பொருளுணர்தற் கரிதாயுமுள்ள மந்திரநூலாக விளங்கி, தூயவறிஞர் நினைக்குந்தோறும் அவருள்ளத்தை யுருக்கும்.

எறிச்சலூர் மலாடனார்

25. பாயிர நான்கில் லறமிருபான் பன்மூன்றே
தூய துறவறமொன் றூழாக - வாய
வறத்துப்பா னால்வகையா வாய்ந்துரைத்தார் நூலின்
றிறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து.

விளக்கவுரை :

திருவள்ளுவர் நன்றாக ஆய்ந்து பாயிரம் நான்கதி காரமும் இல்லறவியல் இருபததிகாரமும் துறவறவியல் பதின்மூன்றதிகாரமும் ஊழ் ஓரதிகாரமுமாக, அறத்துப்பாலை நால்வகையாக வகுத்துரைத்தார்.

திருவள்ளுவர், திருவள்ளுவமாலை, thiruvalluvar, thiruvalluvamalai, valluvar