Showing posts with label மருந்து - MEDICINE. Show all posts


Thirukural 950 of 1330 - திருக்குறள் 950 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : மருந்து.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.

Translation:

For patient, leech, and remedies, and him who waits by patient's side,
The art of medicine must fourfold code of laws provide.

Explanation:

Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.

கலைஞர் உரை:

நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.

[ads-post]

மு. உரை:

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.

சாலமன் பாப்பையா உரை:

நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.

மணக்குடவர் உரை:

நோயுற்றவனும், நோய்தீர்க்குமவனும், மருந்தும், அதற்குத்தக்க மருந்தினைக் காலம் தப்பாமல் இயற்றுவானும் என்றிவ்வகைப்பட்ட நான்கு திறத்தது மருந்து.

பரிமேலழகர் உரை:

மருந்து - பிணிக்கு மருந்தாவது; உற்றவன்- அதனையுற்றவன்; தீர்ப்பான் - அதனைத் தீர்க்கும் மருத்துவன்; மருந்து - அவனுக்குக் கருவியாகிய மருந்து; உழைச் செல்வான் என்று அப்பால் நாற்கூற்று - அதனைப் பிழையாமல் இயற்றுவான் என்று சொல்லப்பட்ட நான்கு பகுதியையுடைய நான்கு திறத்தது. (நான்கு என்னும் எண் வருகின்றமையின், அது நோக்கி 'அப்பால்' என்றொழிந்தார், 'நான்கு கூற்றது' என்பது விகாரமாயிற்று. அவற்றுள் உற்றவன் வகை நான்காவன பொருளுடைமை, மருத்துவன் வழிநிற்றல், நோய்நிலை உணர்த்தல் வன்மை, மருந்துத் துன்பம் பொறுத்தல் என இவை. தீர்ப்பான் வகை நான்காவன: நோய் கண்டு அஞ்சாமை, ஆசிரியனை வழிபட்டு எய்திய கல்வியும் நுண்ணறிவும் உடைமை, பலகாலும் தீர்த்து வருதல், மனமொழி மெய்கள் தூயவாதல் என இவை. மருந்தின்வகை நான்காவன: பல பிணிகட்கும் ஏற்றல், சுவை வீரியம் விளைவாற்றல்களான் மேம்படுதல், எளிதின் எய்தப்படுதல், பகுதியோடு பொருந்துதல் என இவை. இயற்றுவான் வகை நான்காவன: ஆதுரன்மாட்டு அன்புடைமை, மனமொழி மெய்கள் தூயவாதல், சொல்லியன அவ்வாறே செய்தல் வன்மை, அறிவுடைமை என இவை. இவையெல்லாம் கூடியவழியல்லது பிணி தீராமையின் இத்தொகுதியையும் 'மருந்து' என்றார், ஆயுள்வேதமுடையாரும் இவை கால்களாக நடக்கும்என்பது பற்றி 'பாதம்' என்றும், இவை மாறுபட்டவழிச் சாத்தியமும் முதிர்ந்து அசாத்தியமாம் என்றும் கூறினார். இதனான், அதனைத் தீர்த்தற்கு வேண்டுவன எல்லாம் தொகுத்துக்கூறப்பட்டன.)


Thirukural 949 of 1330 - திருக்குறள் 949 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : மருந்து.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.

Translation:

The habitudes of patient and disease, the crises of the ill
These must the learned leech think over well, then use his skill.

Explanation:

The learned (physician) should ascertain the condition of his patient; the nature of his disease, and the season (of the year) and (then) proceed (with his treatment).

கலைஞர் உரை:

நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் என்பனவற்றை எல்லாம் மருத்துவம் கற்றவர் எண்ணிப் பார்த்தே செயல்பட வேண்டும்.

[ads-post]

மு. உரை:

மருத்துவ நூலைக் கற்றவன், நோயுற்றவனுடைய வயது முதலியவற்றையும், நோயின் அளவையும், காலத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

மருத்துவ நூலை நன்கு கற்ற மருத்துவர், நோயாளியின் நோயைப் போக்க முயலும்போது, நோயாளியின் வயது, அந்நோய் வந்திருக்கும் காலம், நோயைப் போக்கத் தனக்குத் தேவையாகும் காலம் ஆகியவற்றை எண்ணிச் செயல்பட வேண்டும்.

மணக்குடவர் உரை:

நோயுற்றவனது அளவும் நோயினது அளவும் அதுபற்றிய காலமும் அறிந்து அதற்குத்தக்கவாறு மருந்து செய்க: ஆயுள் வேதம் வல்லவன்.

பரிமேலழகர் உரை:

கற்றான் - ஆயுள் வேதத்தினைக் கற்ற மருத்துவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் - அவ்வுபாயத்தினைச் செய்யுங்கால், ஆதுரன் அளவினையும் அவன்கண் நிகழ்கின்ற நோயின் அளவினையும் தன்செயற்கு ஏற்ற காலத்தினையும் அந்நூல் நெறியால் நோக்கி, அவற்றோடு பொருந்தச் செய்க. (ஆதுரன் அளவு - பகுதி பருவம் வேதனை வலிகளின் அளவு. பிணி அளவு - சாத்தியம், அசாத்தியம், யாப்பியம் என்னும் சாதிவேறுபாடும், தொடக்க நடு ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும், வன்மை மென்மைகளும் முதலாயின. காலம் - மேற்சொல்லியன. இம் மூன்றும் பிழையாமல் நூல் நெறியானும் உணர்வு மிகுதியானும் அறிந்து செய்க என்பார், 'கற்றான் கருதிச் செயல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் அவ்விழுக்குப் பட்டுழி மருத்துவன் தீர்க்குமாறு கூறப்பட்டது.)
Powered by Blogger.