திருவள்ளுவர் அறிமுகம் - Thiruvalluvar
Introduction:
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச் சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர். பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சில நூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருவள்ளுவரின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது
திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது
திருக்குறள்"