Showing posts with label நல்குரவு - POVERTY. Show all posts


Thirukural 1050 of 1330 - திருக்குறள் 1050 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : நல்குரவு.

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Translation:

Unless the destitute will utterly themselves deny,
They cause their neighbour's salt and vinegar to die.

Explanation:

The destitute poor, who do not renounce their bodies, only consume their neighbour's salt and water.

கலைஞர் உரை:

ஒழுங்குமறையற்றதால் வறுமையுற்றோர், முழுமையாகத் தம்மைத் துறக்காமல் உயிர்வாழ்வது, உப்புக்கும் கஞ்சிக்கும்தான் கேடு.

[ads-post]

மு. உரை:

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

உண்ண, உடுத்த ஏதம் இல்லாதவர் இல்லறத்தை முழுமையாகத் துறந்து விடாதிருப்பது, பிறர் வீட்டில் இருக்கும் உப்புக்கும் கஞ்சித் தண்ணீருக்கும் எமனாம்.

மணக்குடவர் உரை:

நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம். துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:

துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம். (மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)


Thirukural 1049 of 1330 - திருக்குறள் 1049 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : நல்குரவு.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

Translation:

Amid the flames sleep may men's eyelids close,
In poverty the eye knows no repose.

Explanation:

One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.

கலைஞர் உரை:

நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

[ads-post]

மு. உரை:

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:

யோக வலிமையால் நெருப்பிற்குள் படுத்து உறங்கவும் முடியும்; ஆனால், பசிக் கொடுமைக்குள் சிறிது கூடக் கண் மூட முடியாது.

மணக்குடவர் உரை:

நெருப்பினுள்ளே கிடந்து உறங்குதலும் ஆகும்; நிரப்பிடும்பையுள் உறங்குதல் யாதொரு முகத்தினாலும் அரிது. இஃது உறங்கவொட்டா தென்றது.

பரிமேலழகர் உரை:

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)


Thirukural 1048 of 1330 - திருக்குறள் 1048 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : நல்குரவு.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

Translation:

And will it come today as yesterday,
The grief of want that eats my soul away?.

Explanation:

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?.

கலைஞர் உரை:

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

[ads-post]

மு. உரை:

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

சாலமன் பாப்பையா உரை:

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.

மணக்குடவர் உரை:

இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:

நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)
Powered by Blogger.