திருவள்ளுவ மாலை 16 - 20 of 55 பாடல்கள்

திருவள்ளுவ மாலை 16 - 20 of 55 பாடல்கள்


நத்தத்தனார்

16. ஆயிரத்து முந்நூற்று முப்ப தருங்குறளும்
பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின்--போயொருத்தர்
வாய்க்கேட்க நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ
ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்.

விளக்கவுரை :

ஒருவர் திருக்குறள் முழுவதையுங் கற்றபின், பிறருக்கு ஆசிரியராகிக் கற்பிக்கலாம். ஆனால், ஒருவரிடம் மாணவரா யமர்ந்து கற்க நூலில்லை.

முகையலூர்ச் சிறுகருத்தும்பியார்


17. உள்ளுத லுள்ளி யுரைத்த லுரைத்ததனைத்
தெள்ளுத லன்றே செயற்பால--வள்ளுவனார்
முப்பாலின் மிக்க மொழியுண் டெனப்பகர்வா
ரெப்பா வலரினு மில்.

விளக்கவுரை :


திருக்குறளினுஞ் சிறந்தநூல் ஒன்றுண்டென்று எப்புலவருஞ் சொல்லார். ஆதலால் நாம் செய்யவேண்டியது அதை யுள்ளஞ்செறாது உரைத்துத் தெளிதலே.

[ads-post]

ஆசிரியர் நல்லந்துவனார்


18. சாற்றிய பல்கலையுந் தப்பா வருமறையும்
போற்றி யுரைத்த பொருளெல்லாந்--தோற்றவே
முப்பான் மொழிந்த முதற்பா வலரொப்பா
ரெப்பா வலரினு மில்.

விளக்கவுரை :


எல்லாக் கலைநூற்பொருள்களையும் எடுத்துக்கூறும் திருக்குறளை யியற்றிய, திருவள்ளுவரை யொத்த புலவர் ஒருவருமில்லை.

கீரந்தையார்


19. தப்பா முதற்பாவாற் றாமாண்ட பாடலினான்
முப்பாலி னாற்பான் மொழிந்தவ-- ரெப்பாலும்
வைவைத்த கூர்மேல் வழுதி மனமகிழத்
தெய்வத் திருவள் ளுவர்.

விளக்கவுரை :

பாண்டியன் மனமகிழ நாற்பொருளையும் முப்பாலிற் குறள் வெண்பாவாற் கூறியவர் தெய்வப் புலமைத் திருவள்ளுவரே.

சிறுமேதாவியார்


20. வீடொன்று பாயிர நான்கு விளங்கற
நாடிய முப்பத்து மூன்றென்றூழ்-கூடுபொரு
ளெள்ளி லெழுப திருபதிற் றைந்தின்பம்
வள்ளுவர் சொன்னவகை.

விளக்கவுரை :


திருக்குறள் அதிகாரத்தொகை:பாயிரம் நான்கு; அறத்துப்பால் முப்பத்து மூன்று; ஊழ் ஒன்று; பொருட்பால் எழுபது; இன்பத்துப்பால் இருபத்தைந்து.

திருவள்ளுவர், திருவள்ளுவமாலை, thiruvalluvar, thiruvalluvamalai, valluvar