Showing posts with label செங்கோன்மை - THE RIGHT SCEPTRE. Show all posts

Thirukural 550 of 1330 - திருக்குறள் 550 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : செங்கோன்மை.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

Translation:

By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.

Explanation:

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.

கலைஞர் உரை:

கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.

[ads-post]

மு. உரை:

கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைச் களைவதற்க்கு நிகரான செயலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.

மணக்குடவர் உரை:

கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்றமன்று: உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும். கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.

பரிமேலழகர் உரை:

வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் - அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், பைங்கூழ் களை கட்டதனொடு நேர் - உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும். ('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார்,கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப.இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)

Thirukural 549 of 1330 - திருக்குறள் 549 of 1330

thirukural

குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : செங்கோன்மை.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.

Translation:

Abroad to guard, at home to punish, brings
No just reproach; 'tis work assigned to kings.

Explanation:

In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.

கலைஞர் உரை:

குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமையாகும்.

[ads-post]

மு. உரை:

குடிகளைப் பிறர் வருந்தாமல் காத்து, தானும் வருந்தாமல் காப்பாற்றி, அவற்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில் பழி அன்று.

சாலமன் பாப்பையா உரை:

அயலவர் அழிக்காமல் குடிமக்களையும் தன்னையும் காத்து, குடிகளின் குறைகளைக் களைந்து நேரிய ஆட்சி செய்வது, ஆட்சியாளருக்குக் குறை ஆகாது. அது அவர் தொழில்.

மணக்குடவர் உரை:

குடிகளை நலியாமற் காத்து, ஓம்புதற்காகக் குற்றஞ் செய்தாரை ஒறுத்தல் குற்றமன்று; அரசன் தொழில்.

பரிமேலழகர் உரை:

குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தன் வடு அன்று தொழில் - வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான். (துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதிதருமம்' என்றார்.)

Thirukural 548 of 1330 - திருக்குறள் 548 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : செங்கோன்மை.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

Translation:

Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.

Explanation:

The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.

கலைஞர் உரை:

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

[ads-post]

மு. உரை:

எளிய செவ்வி உடையவனாய் ஆராய்ந்து நீதி முறை செய்யாத அரசன், தாழ்ந்த நிலையில் நின்று (பகைவரில்லாமலும் ) தானே கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

நீதி தேடி வருவார்க்கு எளிய காட்சியாளனாய், நீதி தேடுவார் சொல்வதைப் பலவகை நூலாரோடும், ஆராய்ந்து நீதி வழங்காத ஆட்சியாளன். பாவமும் பலியும் எய்தித் தானே அழிவான்.

மணக்குடவர் உரை:

எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அரசன் தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும். எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங்காலம்.

பரிமேலழகர் உரை:

'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம்: பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவைசெய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக்.85) ஆகலின்,பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடுகூறப்பட்டது.)
Powered by Blogger.