Showing posts with label துறவறவியல் - ASCETIC VIRTUE. Show all posts

Thirukural 370 of 1330 - திருக்குறள் 370 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : அவாவறுத்தல்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

Translation:

Drive from thy soul desire insatiate;
Straight'way is gained the moveless blissful state.

Explanation:

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

கலைஞர் உரை:

இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

[ads-post]

மு. உரை:

ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை:

நிறையா இயல்பினையுடைய ஆசையை விடுவானாயின் அது விட்ட பொழுதே அழியாத இயல்பினைத் தரும். இயல்பாவது என்றும் ஒருபடிப்பட்டது. இது தன்னுடைய உருவத்தைப் பெறுமென்றது.

பரிமேலழகர் உரை:

ஆரா இயற்கை அவா நீப்பின் - ஒருகாலும் நிரம்பாத இயல்பினையுடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின், அந்நிலையே பேரா இயற்கை தரும் - அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலைமையனாம் இயல்பைக் கொடுக்கும். (நிரம்பாமையாவது: தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன் மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக்கு கவற்சிகளும் பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களும் முதலாயின இன்றி, உயிர் நிரதிசய இன்பத்தாய் நிற்றலின் வீட்டினை 'பேரா இயற்கை' என்றும், அஃது அவாநீத்த வழிப்பெறுதல் ஒரு தலையாகலின், 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார். ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து, சென்றாங்கு இன்பத்துன்பங்கள் செற்றுக்களைந்து பசையற்றால், அன்றே அப்போதே வீடும் அதுவே வீடு வீடாமே. (திருவாய் 78-6)என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை உடையவனை வடநூலார் 'சீவன் முத்தன்' என்ப. இதனால் வீடாவது இது என்பதூஉம், அஃது அவா அறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.).

Thirukural 369 of 1330 - திருக்குறள் 369 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : அவாவறுத்தல்.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

Translation:

When dies away desire, that woe of woes
Ev'n here the soul unceasing rapture knows.

Explanation:

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.

கலைஞர் உரை:

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

[ads-post]

மு. உரை:

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

மணக்குடவர் உரை:

அவாவாகிய துன்பங்களுள் மிக்க துன்பம் கெடுமாயின் இன்பமானது இடையறாமல் வந்து மிகும். இஃது இன்பமும் இதனாலே வருமென்றது.

பரிமேலழகர் உரை:

அவா என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - அவா என்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது. அவன் வீடு பெற்ற வழியே அன்றி உடம்போடு நின்ற வழியும் இன்பம் இடையறாது. (துன்பத்துள்துன்பம் - ஏனைத் துன்பங்கள் எல்லாம் இன்பமாக வரும்துன்பம். விளைவின் கண்ணே அன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பமாகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக்காரியமாக உபசரித்து அவா என்றும், 'துன்பத்துள்துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனம் தடுமாறாதுநிரம்பி நிற்றலான் 'ஈண்டும் இன்பம் இடையறாது'என்றும் கூறினார். இனி 'ஈண்டும்' என்பதற்குப் 'பெருகும்'என்று உரைப்பாரும் உளர். இதனால் அவா அறுத்தார்வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பதுகூறப்பட்டது.).

Thirukural 368 of 1330 - திருக்குறள் 368 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : அவாவறுத்தல்.

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

Translation:

Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow's tide.

Explanation:

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.

கலைஞர் உரை:

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

 [ads-post]

மு. உரை:

அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

மணக்குடவர் உரை:

ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

பரிமேலழகர் உரை:

அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும். (உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.).
Powered by Blogger.