குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : குறிப்பறிவுறுத்தல்.
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
Translation:
My severance from the lord of this cool
shore,
My very armlets told me long before.
Explanation:
My bracelets have understood before me the
(mental) separation of him who rules the cool seashore.
கலைஞர் உரை:
குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!.
[ads-post]
மு.வ உரை:
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!.
சாலமன் பாப்பையா உரை:
குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.
மணக்குடவர் உரை:
குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை நாமறிவதற்கும் முன்னே வளைகள் அறிந்தன.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற் பிரிந்தமையை; நம்மினும் வளை முன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளைகள் முன்னே அறிந்தன. (கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தெளிய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அதுதன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.).