குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : உறுப்புநலனழிதல்.
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
Translation:
One day the fervent pressure of embracing
arms I checked,
Grew wan the forehead of the maid with
golden armlet decked.
Explanation:
When I once loosened the arms that were in
embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
கலைஞர் உரை:
இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.
[ads-post]
மு.வ உரை:
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!.
மணக்குடவர் உரை:
யான் பிரிவதாக நினைத்து அவள் முயங்கிய கைகளை நீக்கினேனாக; அதனை யறிந்து பசுத்ததொடியினையுடைய பேதை நுதல் பசந்தது.
பரிமேலழகர் உரை:
(வினைமுடிதது மீளலுற்ற தலைமகன், முன் நிகழ்ந்தது நினைந்து தன்னுள்ளே சொல்லியது.) முயங்கிய கைகளை ஊக்க - தன்னை இறுக முயங்கிய கைகளை 'இவட்கு நோம்' என்று கருதி ஒருஞான்று யான் நெகிழ்ந்தேனாக; பைந்தொடி பேதை நுதல் பசந்தது - அத்துணையும் பொறாது பைந்தொடிகளை அணிந்த பேதையது நுதல் பசந்தது, அப்பெற்றித்தாய நுதல் இப்பிரிவிற்கு யாது செய்யுமோ? ('இனிக்கடிதிற் செல்லவேண்டும்' என்பது கருத்து.).