குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
Translation:
What clearly eye discerns as right, with
steadfast will,
And mind unslumbering, that should man
fulfil.
Explanation:
An act that has been firmly resolved on
must be as firmly carried out without delay.
கலைஞர் உரை:
மனக் குழப்பமின்றித் தெளிவாக முடிவு செய்யப்பட்ட ஒரு செயலைத் தளர்ச்சியும், தாமதமும் இடையே ஏற்படாமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.
மணக்குடவர் உரை:
கலக்கமின்றி ஆராய்ந்துகண்ட
வினையிடத்துப் பின்னைத் துளக்கமின்றி அதனை நீட்டியாது செய்க. இது விரைந்து
செய்யவேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
கலங்காது கண்ட வினைக்கண் - மனந்தெளிந்து
செய்வதாகத் துணிந்த வினையின்கண்; துளங்காது தூக்கம் கடிந்து செயல் - பின் அசைதலின்றி
நீட்டித்தலை யொழிந்து செய்க.
(கலங்கிய வழி ஒழிவதும் செய்வது போலத் தோன்றுமாதலின்,தெளிந்து பலகால்
ஆராய்ந்து தாம் செய்வதாக ஓர்த்த வினையைக் 'கலங்காது கண்டவினை' என்றார். துளங்காமை - திட்பம் உடைமை.)