குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
Translation:
Not
e'en through inadvertence speak they foolish word,
With
clear discerning mind who've learning's ample lessons heard.
Explanation:
Not
even when they have imperfectly understood (a matter), will those men speak
foolishly, who have profoundly studied and diligently listened (to
instruction).
கலைஞர் உரை:
எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.
[ads-post]
மு.வ உரை:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிதாக ஆராய்ந்து அறிந்து, கேள்வி ஞானத்தால் நிறைந்தவர், பிழைபட உணர்ந்தபோதும், அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
மணக்குடவர் உரை:
(இ-ள்) ஒரு பொருளைத் தப்ப உணர்ந்தாலும், அறிவின்மை யாயின
சொல்லார், ஆராய்ந்துணர்ந்து
நிரம்பிய கேள்வியை யுடையார். இது கேட்டறிந்தார் அறியாமை சொல்லா ரென்றது.
பரிமேலழகர் உரை:
பிழைத்து உணர்ந்தும் பேதைமை
சொல்லார் - பிறழ உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச் சொல்லார், இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர்- பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து அதன்மேலும்
ஈண்டிய கேள்வியினை உடையார். ('பிழைப்ப' என்பது திரிந்து நின்றது. பேதைமை : ஆகுபெயர். ஈண்டுதல் :
பலவாற்றான் வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து, அறிந்தாரோடு
ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது
சொல்லார் என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)