குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : நினைந்தவர்புலம்பல்.
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
Translation:
My frequent thought no wrath excites. It is
not so?
This honour doth my love on me bestow.
Explanation:
He will not be angry however much I may
think of him; is it not so much the delight my beloved affords me?.
கலைஞர் உரை:
எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அதற்காகக் காதலர் என் மீது சினம் கொள்ளமாட்டார். அவர் எனக்குச் செய்யும் பெரும் உதவி அதுவல்லவா?.
[ads-post]
மு.வ உரை:
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!.
சாலமன் பாப்பையா உரை:
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!.
மணக்குடவர் உரை:
யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள். அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
பரிமேலழகர் உரை:
(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.).