குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : நன்றியில்செல்வம்.
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
Translation:
Like woman fair in lonelihood who aged
grows,
Is wealth of him on needy men who nought
bestows.
Explanation:
The wealth of him who never bestows
anything on the destitute is like a woman of beauty growing old without a
husband.
கலைஞர் உரை:
வறியவர்க்கு எதுவும் வழங்கி உதவாதவனுடைய செல்வம், மிகுந்த அழகியொருத்தி, தன்னந்தனியாகவே இருந்து முதுமையடைவதைப் போன்றது.
[ads-post]
மு.வ உரை:
பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
ஏதும் இல்லாதவர்க்கு ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவன் செல்வம், மிகுந்த அழகு பெற்ற பெண், திருமணமாகாமலே முதுமை அடைந்தது போலாம்.
மணக்குடவர் உரை:
பொருளற்றார்க்கு யாதானு மொன்றைக் கொடாதவனுடைய செல்வம், மிக்க அழகினைப் பெற்றாளொருத்தி் தனியாளாய் முதிர்ந்தாற்போலும். இது செல்வம் தானும் ஒருபயன் பெறாதென்றது.
பரிமேலழகர் உரை:
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் - ஒரு பொருளும் இலராயினார்க்கு அவர் வேண்டியதொன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிகநலம் பெற்றாள்தமியள் மூத்தற்று - பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாளொருத்தி கொடுப்பாரின்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து. (நலம் - வடிவின் நன்மையும் குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும் கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமேயன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.)