குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : நன்றியில்செல்வம்.
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
Translation:
Their ample wealth is misery to men of
churlish heart,
Who nought themselves enjoy, and nought to
worthy men impart.
Explanation:
He who enjoys not (his riches) nor relieves
the wants of the worthy is a disease to his wealth.
கலைஞர் உரை:
தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.
[ads-post]
மு.வ உரை:
தானும் நுகராமல் தக்கவற்க்கு ஒன்று கொடுத்து உதவும் இயல்பும் இல்லாமல் வாழ்கின்றவன், தன்னிடமுள்ள பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோய் ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் மனப்பாங்கும் இல்லாமல் வாழ்பவனிடம் இருக்கும் பெரும் செல்வம் ஒரு நோயே.
மணக்குடவர் உரை:
தானுந் துவ்வாது பிறர்க்கும் ஒன்று ஈயாத இயல்பினை யுடையான் பெற்ற பெருஞ் செல்வம் குற்றமுடைத்து.
பரிமேலழகர் உரை:
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான் - தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டிய தொன்றனை ஈதலியற்கை இலனாயின்; பெருஞ்செல்வம் ஏதம் - இரண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய். (தகுதி - தானம் கோடற்கு ஏற்புடைமை. ஏதம் - ஆகுபெயர், நுகரப்படுதலும் ஈயப்படுதலுமாகிய தொழிற்கு உரியதனை அன்றாக்கினமையின், 'நோய்' என்றார். 'ஈதல் இயல்பிலாதானது பெருஞ்செல்வம் அவனுக்கு ஈட்டல் காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம்' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன் கூறப்பட்டன.)