Thirukural 782 of 1330 - திருக்குறள் 782 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : நட்பு.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

Translation:

Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.

Explanation:

The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

கலைஞர் உரை:

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

[ads-post]

மு. உரை:

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

சாலமன் பாப்பையா உரை:

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

மணக்குடவர் உரை:

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மைபோல ஒருநாளைக் கொரு நாள் தேயும் பேதையார் கொண்ட நட்பு. இஃது அறிவுடையார் நட்பு வளருமென்றும் அறிவில்லாதார் நட்புத் தேயுமென்றுங் கூறிற்று

பரிமேலழகர் உரை:

நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். '('நீரவர்' என்றார், இனிமை பற்றி. கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின்' அறிதலும் ஆம்.)


Thirukural 781 of 1330 - திருக்குறள் 781 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : நட்பு.

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.

Translation:

What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?.

Explanation:

What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes)?.

கலைஞர் உரை:

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை. அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

[ads-post]

மு. உரை:

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?.

மணக்குடவர் உரை:

நட்புப்போல உண்டாக்குதற்கு அரியவான பொருள்கள் யாவையுள? அவ்வாறு உண்டாக்கப்பட்ட நட்புப்போலப் பிறர் நல்வினை செய்தற்கு அரியவாகக் காக்கும் காவல்கள் யாவையுள? இது நட்புத் தேடவரிது என்றது.

பரிமேலழகர் உரை:

நட்பின் செயற்கு அரிய யா உள - நட்புப்போலச் செய்து கோடற்கு அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள - செய்துகொண்டால் அது போலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள? (நட்புச்செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால்செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும்முதலிய அரிய ஆகலின். 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும், செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல வினைவாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்: அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய முறையானாயதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழாலின்'அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அதுதுணைவலி என 'வலியறிதலுள்' அடங்கிற்று. இனி ஈண்டுச்சொல்லப்படுவது முன்செய்த உதவி பற்றி வருஞ் செயற்கையேயாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.)
Powered by Blogger.