Thirukural 782 of 1330 - திருக்குறள் 782 of 1330


Thirukural 782 of 1330 - திருக்குறள் 782 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : நட்பு.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

Translation:

Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.

Explanation:

The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

கலைஞர் உரை:

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

[ads-post]

மு. உரை:

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

சாலமன் பாப்பையா உரை:

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

மணக்குடவர் உரை:

பிறை நிறையும் நீர்மைபோல, ஒருநாளைக் கொருநாள் வளரும் அறிவுடையார் கொண்ட நட்பு; மதியின் பின்னீர்மைபோல ஒருநாளைக் கொரு நாள் தேயும் பேதையார் கொண்ட நட்பு. இஃது அறிவுடையார் நட்பு வளருமென்றும் அறிவில்லாதார் நட்புத் தேயுமென்றுங் கூறிற்று

பரிமேலழகர் உரை:

நீரவர் கேண்மை பிறை நிறை நீர - அறிவுடையார் நட்புக்கள் பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர - மற்றைப் பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந் தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம். '('நீரவர்' என்றார், இனிமை பற்றி. கேண்மை, நட்பு என்பன ஒரு பொருட்கிளவி. செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின. அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன் அறியாமையும் பின்' அறிதலும் ஆம்.)

thirukural, kural, thiruvalluvar, valluvar