Thirukural 285 of 1330 - திருக்குறள் 285 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : கள்ளாமை.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

Translation:

'Grace' is not in their thoughts, nor know they kind affection's power,
Who neighbour's goods desire, and watch for his unguarded hour.

Explanation:

The study of kindness and the exercise of benevolence is not with those who watch for another's forgetfulness, though desire of his property.

கலைஞர் உரை:

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

[ads-post]

மு. உரை:

அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

மணக்குடவர் உரை:

அருளைக் குறித்து உயிர்மீது அன்புடையரா யொழுகுதல் பொருளை குறித்துப் பிறரது மறவியைப் பார்ப்பார் மாட்டு இல்லை. இஃது அருளும் அன்பு மில்லையாமென்றது.

பரிமேலழகர் உரை:

அருள் கருதி அன்பு உடையர் ஆதல் - அருளினது உயர்ச்சியை அறிந்து அதன்மேல் அன்புடையராய் ஒழுகுதல், பொருள் கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார்மாட்டு உண்டாகாது. (தமக்கு உரிய பொருளையும் அதனது குற்றம் நோக்கித் துறந்து போந்தவர், பின் பிறர்க்கு உரிய பொருளை நன்கு மதித்து, அதனை வஞ்சித்துக் கோடற்கு அவரது சோர்வு பார்க்கும் மருட்சியரானால், அவர்மாட்டு, உயிர்கள்மேல் அருள் செய்தல் நமக்கு உறுதி என்று அறிந்து அவ்வருளின் வழுவாது ஒழுகும் தெருட்சிகூடாது என்பதாம்.).

Thirukural 284 of 1330 - திருக்குறள் 284 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : கள்ளாமை.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

Translation:

The lust inveterate of fraudful gain,
Yields as its fruit undying pain.

Explanation:

The eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce undying sorrow.

கலைஞர் உரை:

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

[ads-post]

மு. உரை:

களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

மணக்குடவர் உரை:

களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.

பரிமேலழகர் உரை:

களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.).

Thirukural 283 of 1330 - திருக்குறள் 283 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : துறவறவியல். அதிகாரம் : கள்ளாமை.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

Translation:

The gain that comes by fraud, although it seems to grow
With limitless increase, to ruin swift shall go.

Explanation:

The property, which is acquired by fraud, will entirely perish, even while it seems to increase.

கலைஞர் உரை:

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

[ads-post]

மு. உரை:

களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.

சாலமன் பாப்பையா உரை:

திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

மணக்குடவர் உரை:

களவிற் கொண்ட பொருளா லாகிய ஆக்கம் மேன் மேலும் மிகுவதுபோலக் கெடும். இது பொருள் நிலையாதென்றது.

பரிமேலழகர் உரை:

களவினால் ஆகிய ஆக்கம் - களவினால் உளதாகிய பொருள், ஆவது போல அளவிறந்து கெடும் - வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். (ஆக்கத்திற்கு ஏதுவாகலின் 'ஆக்கம்' எனப்பட்டது. எல்லையைக் கடந்து கெடுதலாவது, தான் போங்கால் பாவத்தையும் பழியையும் நிறுத்திச் செய்த அறத்தையும் உடன்கொண்டு போதல். 'அளவு அறிந்து அவ்வளவிற்கு உதவாது கெடும்' என்று உரைப்பாரும் உளர்.).
Powered by Blogger.