குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
கள்ளாமை.
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
Translation:
The
lust inveterate of fraudful gain,
Yields
as its fruit undying pain.
Explanation:
The
eager desire of defrauding others will, when it brings forth its fruit, produce
undying sorrow.
கலைஞர் உரை:
களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.
[ads-post]
மு.வ உரை:
களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.
மணக்குடவர் உரை:
களவின்கண்ணே மிக்கஆசை, பயன்படுங் காலத்துக் கேடில்லாத நோயைத் தரும். இது நரகம் புகுத்தும் என்றது.
பரிமேலழகர் உரை:
களவின்கண் கன்றிய காதல் - பிறர் பொருளை வஞ்சித்துக் கோடற்கண்ணே மிக்க வேட்கை, விளைவின்கண் வீயாவிழுமம் தரும்- அப்பொழுது இனிதுபோலத் தோன்றித் தான் பயன் கொடுக்கும் பொழுது தொலையாத இடும்பையைக் கொடுக்கும். (கன்றுதலான் எஞ்ஞான்றும் அக்களவையே பயில்வித்து அதனால் பாவமும் பழியும் பயந்தே விடுதலின் வீயா விழுமம் தரும் என்றார். இவை இரண்டு பாட்டானும் அது கடியப்படுதற்குக் காரணம் கூறப்பட்டது.).