Thirukural 213 of 1330 - திருக்குறள் 213 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : ஒப்புரவறிதல்.

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

Translation:

To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.

Explanation:

It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.

கலைஞர் உரை:

பிறர்க்கு உதவிடும் பண்பாகிய ஒப்புரவு என்பதைவிடச் சிறந்த பண்பினை இன்றைய உலகிலும், இனிவரும் புதிய உலகிலும் காண்பது அரிது.

[ads-post]

மு. உரை:

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

சாலமன் பாப்பையா உரை:

தேவர்கள் உலகத்திலும் இப்பூவுலகிலும், உழைக்க முடியாதவர்க்கு உதவுவது போன்ற வேறு நல்ல செயல்களைப் பெறுவது கடினம்.

மணக்குடவர் உரை:

ஒப்புரவு செய்தலின் நன்றாயிருப்பது தேவருலகத்தினும் இவ்வுலகத்தினும் பெறுதற்கு அரிதாம்.

பரிமேலழகர் உரை:

புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது - ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று, யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. 'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம் அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.).


Thirukural 212 of 1330 - திருக்குறள் 212 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : ஒப்புரவறிதல்.

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

Translation:

The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.

Explanation:

All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.

கலைஞர் உரை:

தகுதியுடையோர் நலனுக்கு உதவிடும் பொருட்டே ஒருவன் முயன்று திரட்டிய பொருள் பயன்பட வேண்டும்.

[ads-post]

மு. உரை:

ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

முயன்று சம்பாதித்த பொருள் எல்லாம், உழைக்க முடியாமல் பொருள் தேவைப்படுவோர்க்கு உதவுவதற்கே.

மணக்குடவர் உரை:

ஒருவன் முயன்று ஈட்டிய பொருளெல்லாம் தகுதி யுடையார்க்கு உபகரித்தற்காகவாம். இது பொருளுண்டானால் ஒப்புரவு செய்கவென்றது.

பரிமேலழகர் உரை:

தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு - ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார் போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.).


Thirukural 211 of 1330 - திருக்குறள் 211 of 1330

thirukural
குறள் பால் : அறத்துப்பால். குறள் இயல் : இல்லறவியல். அதிகாரம் : ஒப்புரவறிதல்.

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.

Translation:

Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?.

Explanation:

Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?.

கலைஞர் உரை:

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.

[ads-post]

மு. உரை:

இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.

மணக்குடவர் உரை:

ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை:

மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.).
Powered by Blogger.