குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
இல்லறவியல். அதிகாரம் :
ஒப்புரவறிதல்.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
Translation:
Duty demands no recompense; to clouds of
heaven,
By men on earth, what answering gift is
given?.
Explanation:
Benevolence seeks not a return. What does
the world give back to the clouds ?.
கலைஞர் உரை:
கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை; அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
[ads-post]
மு.வ உரை:
இந்த உலகத்தார் மழைக்கு என்ன கைமாறு செய்கின்றனர்;, மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைமாறு வேண்டாதவை.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு உதவுவது, அவ்வுதவியைப் பெற்றவர் திரும்பச் செய்வதை எதிர்பார்த்து அன்று; ஒருவர் செய்ததற்குத் திரும்பச் செய்துதான் ஆகவேண்டும் என்றால் மழை தரும் மேகங்களுக்கு இந்த உலகம் திரும்ப என்ன செய்துவிட முடியும்?.
மணக்குடவர் உரை:
ஒப்புரவு செய்யுங்காற் கைம்மாறு கருதிச் செய்ய வேண்டா: எல்லார்க்கும் நல்வழி சுரக்கின்ற மாரிக்கு உலகம் கைம்மாறு செய்தலுண்டோ? கடப்பாடு- ஒப்புரவு. இஃது ஒப்புரவாவது கைம்மாறு வேண்டாத கொடை யென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல. ('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா' என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.).