குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : பண்புடைமை.
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
Translation:
Though men with all unfriendly acts and
wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to
fail.
Explanation:
It is wrong (for the wise) not to exhibit
(good) qualities even towards those who bearing no friendship (for them) do
only what is hateful.
கலைஞர் உரை:
நட்புக்கு ஏற்றவராக இல்லாமல் தீமைகளையே செய்து கொண்டிருப்பவரிடம், நாம் பொறுமை காட்டிப் பண்புடையவராக நடந்து கொள்ளாவிட்டால் அது இழிவான செயலாகக் கருதப்படும்.
[ads-post]
மு.வ உரை:
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
தம்முடன் நட்புச் செய்யாமல் பகைமை கொண்டு தீமையே செய்பவர்க்கும் கூடப் பண்பற்றவராய் வாழ்வது இழுக்கே.
மணக்குடவர் உரை:
தம்மொடு நட்பினைச்செய்யாது பகைமையைச் செய்தொழுகுவார்மாட்டும் தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவுடையார்க் கிழுக்காம்.
பரிமேலழகர் உரை:
நண்பு ஆற்றாராகி நயம் இல செய்வார்க்கும் - தம்மொடு நட்பினைச் செய்யாது பகைமையைச் செய்தொழுவார் மாட்டும்; பண்பு ஆற்றாராதல் கடை - தாம் பண்புடையராய் ஒழுகாமை அறிவு உடையார்க்கு இழுக்காம். (நயம் - ஈரம். சிறப்பு உம்மை அவர் பண்பாற்றாமைக் கிடனாதல் தோன்ற நின்றது. அதனைச் செய்யின், தாமும் அவர் தன்மையராவர் என்பார், 'கடை' என்றார்.)