குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : சான்றாண்மை.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
Translation:
Submission is the might of men of mighty
acts; the sage
With that same weapon stills his foeman's
rage.
Explanation:
Stooping (to inferiors) is the strength of
those who can accomplish (an undertaking); and that is the weapon with which
the great avert their foes.
கலைஞர் உரை:
ஆணவமின்றிப் பணிவுடன் நடத்தலே, ஆற்றலாளரின் ஆற்றல் என்பதால் அதுவே பகைமையை மாற்றுகின்ற படையாகச் சான்றோர்க்கு அமைவதாகும்.
[ads-post]
மு.வ உரை:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்து முடிப்பவர் திறமை, தம்முடன் பணி ஆற்றுபவரிடம் பணிந்து வேலை வாங்குதலே; சான்றாண்மை தம் பகைவரையும் நண்பராக்கப் பயன்படுத்தும் ஆயுதமும் அதுவே.
மணக்குடவர் உரை:
பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்: சான்றோர்தம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே.
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே. (ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார்.)