குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : பெருமை.
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
Translation:
Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world
proclaim.
Explanation:
The great hide the faults of others; the
base only divulge them.
கலைஞர் உரை:
பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.
[ads-post]
மு.வ உரை:
பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.
மணக்குடவர் உரை:
பெருமை பிறருடைய குறைவை மறைத்துச் சொல்லும்: சிறுமை அவர்க்குள்ள நன்மை சொல்லுதலைத் தவிர்ந்து குற்றத்தையே சொல்லிவிடும். இது குற்றம் கூறாமை பெருமையென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)