குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : பெருமை.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
Translation:
All men that live are one in circumstances
of birth;
Diversities of works give each his special
worth.
Explanation:
All human beings agree as regards their
birth but differ as regards their characteristics, because of the different
qualities of their actions.
கலைஞர் உரை:
பிறப்பினால் அனைவரும் சமம். செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்.
[ads-post]
மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
எல்லா மக்களும் பிறப்பால் சமமே; அவரவர் செய்யும் செயல் வேறுபாடுகளால் மட்டுமே பெருமை வரும்.
மணக்குடவர் உரை:
எல்லா வுயிர்க்கும் பிறப்பால் ஒரு வேறுபாடில்லை. ஆயினும் தான்செய் தொழிலினது ஏற்றச் சுருக்கத்தினாலே பெருமை ஒவ்வாது. எனவே, இது பெருமையாவது குலத்தினால் அறியப்படா தென்பதூஉம் அதற்குக் காரணமும் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது வேறுபாட்டான். (வேறுபாடு - நல்லனவும், தீயனவும், இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய அளவறிந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன் பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும் ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.)