Thirukural 959 of 1330 - திருக்குறள் 959 of 1330


Thirukural 959 of 1330 - திருக்குறள் 959 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : குடிமை.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.

Translation:

Of soil the plants that spring thereout will show the worth:
The words they speak declare the men of noble birth.

Explanation:

As the sprout indicates the nature of the soil, (so) the speech of the noble indicates (that of one's birth).

கலைஞர் உரை:

விளைந்த பயிரைப் பார்த்தாலே இது எந்த நிலத்தில் விளைந்தது என்று அறிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவரின் வாய்ச் சொல்லைக் கேட்டே அவர் எத்தகைய குடியில் பிறந்தவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

[ads-post]

மு. உரை:

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

சாலமன் பாப்பையா உரை:

நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோலக் குடும்பத்தின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.

மணக்குடவர் உரை:

வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.

பரிமேலழகர் உரை:

நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும். (கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)

thirukural, kural, thiruvalluvar, valluvar