குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : குடியியல். அதிகாரம் : குடிமை.
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
Translation:
The faults of men of noble race are seen by
every eye,
As spots on her bright orb that walks
sublime the evening sky.
Explanation:
The defects of the noble will be observed
as clearly as the dark spots in the moon.
கலைஞர் உரை:
பிறந்த குடிக்குப் பெருமை சேர்ப்பவரிடமுள்ள சிறிய குறைகள், ஒளிவு மறைவு ஏதுமின்றி, வானத்து நிலவில் உள்ள குறைபோல வெளிப்படையாகத் தெரியக் கூடியதாகும்.
[ads-post]
மு.வ உரை:
உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.
சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்தவரிடம் ஏதேனும் குறை இருந்தால் அது நிலாவில் தெரியும் களங்கம் போல் பெரிதாகத் தெரியும்.
மணக்குடவர் உரை:
உயர்குடிப் பிறந்தார்மாட்டுக் குற்றமுளதாயின், அது வானத்தின் மதியின்கணுள்ள மறுப்போல உயர்ந்து விளங்கும். ஆதலால் குற்றப்பட ஒழுகற்க. இது குற்றம் செய்தலைத் தவிர வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
குடிப்பிறந்தார்கண் குற்றம் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார் மாட்டு உளதாம் குற்றம்; விசும்பின் மதிக்கண் மறுப்போல உயர்ந்து விளங்கும் - தான் சிறியதேயாயினும் விசும்பின்கண் மதியிடத்து மறுப்போல ஓங்கித் தோன்றும். (உயர்குடி முதலிய பொருள் வகை மூன்றற்கும் விசும்பு முதலிய உவமைவகை ஒத்துப் பால் மாறுபட்டது. குடியது உயர்ச்சியானும் மதி போன்ற அவர் நற்குணங்களோடு மாறாதலானும், உலகெங்கும் பரந்து வெளிப்படும் என்பதாம்.)