குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : மருந்து.
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
Translation:
With self-denial take the well-selected
meal;
So shall thy frame no sudden sickness feel.
Explanation:
There will be no disaster to one's life if
one eats with moderation, food that is not disagreeable.
கலைஞர் உரை:
உடலுக்கு ஒத்துவரக்கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது மறுத்து அளவுடன் உண்டால், உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவுமில்லை.
[ads-post]
மு.வ உரை:
மாறுபாடில்லாதா உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூறான நோய் இல்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் உடம்பிற்கு ஒவ்வொத உணவுகளை விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.
மணக்குடவர் உரை:
சுவையும் வீரியமும் மாறுபாடில்லாத உணவை நீக்கி யுண்பானாயின் தன்னுயிர்க்கு வரும் இடையூறு இல்லை. மாறுபாடு- பலாப்பழந்தின்றால் சுக்குத் தின்றல்.
பரிமேலழகர் உரை:
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின் - அம்மூவகை மாறுகோளும் இல்லாத உணவைத் தன் உள்ளம் வேண்டிய அளவினான்அன்றிப் பிணிவாரா அளவினால் ஒருவன் உண்ணுமாயின்; உயிர்க்கு ஊறுபாடு இல்லை - அவன் உயிர்க்குப் பிணிகளால் துன்பம் விளைதல் உண்டாகாது. (உறுவதனை 'ஊறு' என்றார். அஃது இன்பத்திற் செல்லாதாயிற்று. இல்லை என்பது தொடர்பாகலின். துன்பமுறுவது உயிரேயாகலின், அதன்மேல் வைத்துக் கூறினார். மாறுபாடு இல்வழியும் குறைதல் நன்று என்பதாம். இவை நான்கு பாட்டானும் உண்ணப்படுவனவும், அவற்றது அளவும், காலமும், பயனும் கூறப்பட்டன.)