குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : மருந்து.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
Translation:
No need of medicine to heal your body's
pain,
If, what you ate before digested well, you
eat again.
Explanation:
No medicine is necessary for him who eats
after assuring (himself) that what he has (already) eaten has been digested.
கலைஞர் உரை:
உண்ட உணவு செரிப்பதற்கான கால இடைவெளி தந்து, உணவு அருந்துகிறவர்களின் உடலுக்கு வேறு மருந்தே தேவையில்லை.
[ads-post]
மு.வ உரை:
முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் முதலில் உண்டது சீரணமாகிவிட்டதை நன்கு அறிந்து அதன் பிறகு உண்டால், அவன் உடம்புக்க மருந்து என்று ஒன்று வேண்டியது இல்லை.
மணக்குடவர் உரை:
யாக்கைக்கு மருந்தென்பதொன்று வேண்டா, குற்றமற முற்காலத்து அருந்திய உணவு அற்றமையறிந்து பாதுகாத்து உண்பானாயின். இஃது இவ்வாறு செய்யின் மருந்து தேடவேண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
அருந்தியது அற்றது போற்றி உணின் - ஒருவன் முன்னுண்டது அற்றபடியைக் குறிகளால் தெளிய அறிந்து பின் உண்ணுமாயின்; யாக்கைக்கு மருந்து என வேண்டாவாம் - அவன் யாக்கைக்கு மருந்து என்று வேறு வேண்டாவாம். (குறிகளாவன - யாக்கை நொய்ம்மை, தேக்கின் தூய்மை, காரணங்கள் தொழிற்குரியவாதல், பசி மிகுதல் என இவை முதலாயின. பிணிகள் யாக்கையவாகலின், 'யாக்கைக்கு' என்றார். 'உணின்' என்பது அதன் அருமை தோன்ற நின்றது.)