குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : சூது.
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
Translation:
Seek not the gamester's play; though you
should win,
Your gain is as the baited hook the fish
takes in.
Explanation:
Though able to win, let not one desire
gambling; (for) even what is won is like a fish swallowing the iron in
fish-hook.
கலைஞர் உரை:
வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கவ்விக் கொண்டது போலாகிவிடும்.
[ads-post]
மு.வ உரை:
வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது, வென்ற வெற்றியும் தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுகினாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
வெற்றி பெறும் ஆற்றல் இருந்தாலும் சூதாடுவதை விரும்ப வேண்டா. அதில் பெறும் வெற்றி, தூண்டிலின் முள்ளில் இருக்கும் உணவை மீன் விழுங்கியது போன்றதாம்.
மணக்குடவர் உரை:
வெல்லுமாயினும் சூதினை விரும்பாதொழிக; வென்று பெற்ற பொருளும் தூண்டிலின்கண்ணுண்டாகிய பொருளை மீன் விழுங்கினாற்போலும். இது பின் கேடுபயக்குமென்றது.
பரிமேலழகர் உரை:
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும் ஆற்றல் உடையனாயினும் சூதாடலை விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன் விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால் எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான் மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன் விழுங்கினாற் போலும். (வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்' என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க' என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார் நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால் பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.)