குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : கள்ளுண்ணாமை.
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
Translation:
No more in secret drink, and then deny thy
hidden fraud;
What in thy mind lies hid shall soon be
known abroad.
Explanation:
Let (the drunkard) give up saying "I
have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his
former attempt to conceal.
கலைஞர் உரை:
மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது; காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.
[ads-post]
மு.வ உரை:
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
போதைப் பொருளைப் பயன்படுத்தி அறியேன் என்று பிறர்முன் சொல்வதை விட்டுவிடுக. ஏனெனில் மனத்துக்குள் மறைத்தது, நிதானம் தவறும்போது பெரிதாக வெளிப்பட்டு விடும்.
மணக்குடவர் உரை:
கள்ளுண்டால் களித்தறியே னென்பதனைக் கைவிடுக: மனத்தின்கண்ணே கரந்ததூஉம் அப்பொழுதே வாய்சேர்ந்து புலப்படும்; அது கள்ளிற்கு இயல்பு. உளம் கெடாதென்பார்க்கு இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
களித்து அறியேன் என்பது கைவிடுக - மறைந்துண்டு வைத்து யான் கள்ளுண்டறியேன் என்று உண்ணாத பொழுது தம் ஒழுக்கங் கூறுதலையொழிக; நெஞ்சத்து ஒளித்ததும் ஆங்கே மிகும் - அவ்வுண்ட பொழுதே பிறரறியின் இழுக்காம் என்று முன் நெஞ்சத்து ஒளித்த குற்றமும் முன்னையளவில் மிக்கு வெளிப்படுதலான். ('களித்தறியேன்' எனக் காரணத்தைக் காரியத்தாற் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அது மறைக்கப்படாது என்பது கூறப்பட்டது.)