குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : வரைவின்மகளிர்.
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
Translation:
As demoness who lures to ruin woman's
treacherous love
To men devoid of wisdom's searching power
will prove.
Explanation:
The wise say that to such as are destitute
of discerning sense the embraces of faithless women are (as ruinous as those
of) the celestail female.
கலைஞர் உரை:
வஞ்சக எண்ணங்கொண்ட பொதுமகள் ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட மோகினி மயக்கம் என்று கூறுவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவற்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர்.
சாலமன் பாப்பையா உரை:
வஞ்சிப்பதில் வல்ல பாலியல் தொழிலாளரின் தழுவலை, வஞ்சனையைக் கண்டு அறியும் அறிவற்றவர், காமம் ஊட்டி உயிர் கவரும் தெய்வத்தின் தாக்குதல் என்பர்.
மணக்குடவர் உரை:
யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை. இஃது இவரை அறிவில்லாதவர் சேர்வரென்றது.
பரிமேலழகர் உரை:
மாய மகளிர் முயக்கு - உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர். (அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்.தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)