குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பெண்வழிச்சேறல்.
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
Translation:
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the
other world a thought.
Explanation:
The undertaking of one, who fears his wife
and is therefore destitute of (bliss), will never be applauded.
கலைஞர் உரை:
மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.
[ads-post]
மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.
மணக்குடவர் உரை:
மனையாளை அஞ்சுகின்ற மறுமைப் பயனெய்தாதவன் ஒரு வினையை ஆளுந்தன்மை, பெருமை எய்துதல் இல்லை. இது பொருள் செய்ய மாட்டானென்றது.
பரிமேலழகர் உரை:
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன் மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன் இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று - வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும் நல்லோரால் கொண்டாடப்படாது. ('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான் வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின், 'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும் தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும் கூறினார்.)