குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : உட்பகை.
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
Translation:
Of hidden hate beware, and guard thy life;
In troublous time 'twill deeper wound than
potter's knife.
Explanation:
Fear internal enmity and guard yourself;
(if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which
cuts the potter's clay.
கலைஞர் உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்.
[ads-post]
மு.வ உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும், தளர்ச்சி வந்த போது மட்கலத்தை அறுக்கும் கருவி போல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.
சாலமன் பாப்பையா உரை:
உட்பகைக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்க; காக்காது போனால் நமக்குத் தளர்வு வந்தபோது, மண்கலத்தை அறுக்கும் கைக்கருவிபோல உட்பகையானவர் நம்மை உறுதியாக அழித்து விடுவர்.
மணக்குடவர் உரை:
உடனே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க: அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் கலத்தை அறுங்குங் கருவிபோலத் தப்பாமல் கொல்லுவர். மட்பகை தான் அறுக்குங்கால் பிரறியாமல் நின்று அறுக்கும்.
பரிமேலழகர் உரை:
உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர். ('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின்,கெடுதல் தப்பாது என்பதாம்.)