குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பகைத்திறந்தெரிதல்.
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
Translation:
Without ally, who fights with twofold enemy
o'ermatched,
Must render one of these a friend attached.
Explanation:
He who is alone and helpless while his foes
are two should secure one of them as an agreeable help (to himself).
கலைஞர் உரை:
தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.
மணக்குடவர் உரை:
பகையிரண்டாய்த் தான் ஒருவனாய்த் தனக்குத் துணையும் இலனாயின் அப்பகை யிரண்டினுள் ஒன்றை இனிய துணையாகச் செய்து கொள்க. இஃது இருவரோடு பகைக்கொள்ளலாகா தென்றது.
பரிமேலழகர் உரை:
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையே எனில் இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ எனின் இரண்டு; ஓருவன்தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி, ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து கொள்க. (பொருந்தியது - ஏனையதனை வேறற்கு ஏற்றது. அப்பொழுது - அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச் செய்துகொள்க என்பார், 'இன்துணையா' என்றார். ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும் நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.)