குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : இகல்.
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
Translation:
The life of those who cherished enmity hold
dear,
To grievous fault and utter death is near.
Explanation:
Failure and ruin are not far from him who
says it is sweet to excel in hatred.
கலைஞர் உரை:
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.
[ads-post]
மு.வ உரை:
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.
சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன் வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது காலத்திற்குள்ளேயாம்.
மணக்குடவர் உரை:
பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து. நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.
பரிமேலழகர் உரை:
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். (மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)