குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : புல்லறிவாண்மை.
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
Translation:
Advised, he heeds not; of himself knows
nothing wise;
This man's whole life is all one plague
until he dies.
Explanation:
The fool will not perform (his duties) even
when advised nor ascertain them himself; such a soul is a burden (to the earth)
till it departs (from the body).
கலைஞர் உரை:
சொந்தப் புத்தியும் இல்லாமல் சொல் புத்தியும் கேட்காதவருக்கு அதுவே அவர் வாழ்நாள் முழுதும் அவரை விட்டு நீங்காத நோயாகும்.
[ads-post]
மு.வ உரை:
தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் பிறர் சொன்னாலும் செய்யமாட்டான்; தானாகவும் அறியமாட்டான்; அவனது உயிர் போகும் வரைக்கும் இப்பூமிக்கு அவன் ஒரு நோயே.
மணக்குடவர் உரை:
அறிவுடையார் சொல்லவும் செய்யான்; தானும் தெளியான்; அத்தன்மையனாகிய சீவன் போமளவும் உலகத்தார்க்கு ஒரு நோய் போல்வன். இஃது ஈட்டின பொருளைக் கொடுத்தலும் தொகுத்தலும் செய்யாமை புல்லறி வென்றது.
பரிமேலழகர் உரை:
ஏவவும் செய்கலான் - புல்லறிவாளன் தனக்கு உறுதியாயவற்றை அறிவுடையார் சொல்லா நிற்கவும் செய்யான்; தான் தேறான் - அதுவன்றித் தானாகவும் இவை செய்வன என்று அறியான்; அவ்வுயிர் போமளவும் ஓர் நோய் - அவ்வுயிர் யாக்கையின் நீங்குமளவும் நிலத்திற்குப் பொறுத்தற்கு அரியதொரு நோயாம். (உயிர் தான் உணர்தல் தன்மைத்தாயிருந்தும், நின்ற யாக்கைவயத்தான் மருளல் தன்மைத்தாய் வேறுபடுதலின், 'அவ்வுயிர்' என்றும், அதன் நீங்கிய பொழுதே அதற்கு இரண்டனுள் ஒன்று கூடுதலின் 'போமளவும்' என்றும். குலமலை முதலிய பொறுக்கின்ற நிலத்திற்குப் பாவயாக்கை பெரும் பொறையாய்த் துன்பம் செய்தலின் 'ஓர் நோய்' என்றும் கூறினார்.)