குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : புல்லறிவாண்மை.
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
Translation:
If men what they have never learned assume
to know,
Upon their real learning's power a doubt
'twill throw.
Explanation:
Fools pretending to know what has not been read
(by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered.
கலைஞர் உரை:
அறிந்து கொள்ளாதவைகளையும் அறிந்தவர் போல ஒருவர் போலித்தனமாகக் காட்டிக் கொள்ளும் போது, அவர் ஏற்கனவே எந்தத் துறையில் திறமையுடையவராக இருக்கிறாரோ அதைப் பற்றிய சந்தேகமும் மற்றவர்களுக்கு உருவாகும்.
[ads-post]
மு.வ உரை:
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர், தாம் படிக்காத நூல்களையும் படித்தவர் போலப் பேசிச்செயற்படுவது, அவர் உணமையிலேயே நன்கு அறிந்த நூல்களின் மேலும் சந்தேகத்தைப் பிறர்க்கு உண்டாக்கும்.
மணக்குடவர் உரை:
தாம் உய்யக் கல்லாதவற்றைக் கற்றாராக மேற்கொண்டொழுகல், குற்றந்தீரக் கற்றதனையும் ஐயமாக்கும். இது கல்லாததனை மேற்கொள்ளுதல் புல்லறிவென்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் - புல்லறிவாளர் தாம் கல்லாத நூல்களையும் கற்றாராகத் தாம் மேலிட்டுக் கொண்டு ஒழுகுதல்; கசடு அற வல்லதூஉம் ஐயம் தரும் - கசடறக் கற்றதொரு நூலுண்டாயின் அதன்கண்ணும் பிறர்க்கு ஐயத்தை விளைக்கும். (வல்லது என ஏழாவது இறுதிக்கண்தொக்கது, 'உண்டாயின்' என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயம், 'அது வல்லர் என்பதூஉம் இவ்வாறு கொல்லோ' என்பது.)