குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பேதைமை.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
Translation:
Friendship of fools is very pleasant thing,
Parting with them will leave behind no
sting.
Explanation:
The friendship between fools is exceedingly
delightful (to each other): for at parting there will be nothing to cause them
pain.
கலைஞர் உரை:
அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.
[ads-post]
மு.வ உரை:
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவர்கள் தமக்குள் கொண்ட நட்பில் பிரிவு வந்தால், அவர்களுக்குத் துன்பம் ஒன்றும் இல்லை. அவர்கள் கொண்ட நட்பு அவ்வளவு இனிமையானது!.
மணக்குடவர் உரை:
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான். இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை:
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது. (நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)