குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பேதைமை.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
Translation:
The fool will merit hell in one brief life
on earth,
In which he entering sinks through
sevenfold round of birth.
Explanation:
A fool can procure in a single birth a hell
into which he may enter and suffer through all the seven births.
கலைஞர் உரை:
தன்னிச்சையாகச் செயல்படும் பேதை, எக்காலத்திலும் துன்பமெனும் சகதியில் அழுந்திக் கிடக்க நேரிடும்.
[ads-post]
மு.வ உரை:
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.
மணக்குடவர் உரை:
பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.
பரிமேலழகர் உரை:
பேதை - பேதையாயினான்; எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு - வரும் பிறவிகள் எல்லாம் தான் புக்கு அழுந்தும் நிரயத்தினை; ஒருமைச் செயல் ஆற்றும் - இவ்வொரு பிறப்புள்ளே செய்து கொள்ள வல்லனாம். (எல்லாப் பிறப்பும் ஏழாய் அடங்குதல் அறியப்பட்டமையின், முற்று உம்மை கொடுத்தார். அழுந்துதற்கு இடனாய நிரயம், ஈண்டைப் பிறப்புக்களிலும் கொடுவினை வயத்தால் அந் 'நிரயத்' துன்பமே உழந்து வருதலின், 'எழுமையும் தான் புக்கு அழுந்தும் அளறு' என்றார். முடிவில் காலமெல்லாம் தான் நிரயத்துன்பம் உழத்தற்கு ஏதுவாம் கொடுவினைகளையே அறிந்து சில காலத்துள்ளே செய்துகோடல் பிறர்க்கு அரிதாகலின், 'ஆற்றும்' என்றார். இதனான் அவன் மறுமைச்செயல் கூறப்பட்டது.)