குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : பேதைமை.
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
Translation:
'Mid follies chiefest folly is to fix your
love
On deeds which to your station unbefitting
prove.
Explanation:
The greatest folly is that which leads one
to take delight in doing what is forbidden.
கலைஞர் உரை:
தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.
[ads-post]
மு.வ உரை:
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.
சாலமன் பாப்பையா உரை:
அறியாமையுள் எல்லாம் அறியாமை என்பது, ஒருவன் தனக்கு நன்மை தராதவை மேல் எல்லாம், விருப்பம் கொள்வதே ஆகும்.
மணக்குடவர் உரை:
அறியாமை யெல்லாவற்றுள்ளும் அறியாமையாவது தனக்குக் கைவராத பொருளின்கண் காதன்மை செய்தல். இது வருந்தினாலும் பெறாததற்குக் காதல் செய்தலும் பேதைமையென்றது.
பரிமேலழகர் உரை:
பேதைமையுள் எல்லாம் பேதைமை - ஒருவனுக்குப் பேதைமை எல்லாவற்றுள்ளும் மிக்க பேதைமையாவது; கையல்லதன்கண் காதன்மை செயல் - தனக்காகாத ஒழுக்கத்தின்கண் காதன்மை செய்தல். (இருமைக்கும் ஆகாதென்று நூலோர் கடிந்த செயல்களை விரும்பிச் செய்தல் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பேதைமையது இலக்கணம் கூறப்பட்டது.)