குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : தீ நட்பு.
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
Translation:
From foes ten million fold a greater good
you gain,
Than friendship yields that's formed with
laughers vain.
Explanation:
What comes from enemies is a hundred
million times more profitable than what comes from the friendship of those who
cause only laughter.
கலைஞர் உரை:
சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.
[ads-post]
மு.வ உரை:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.
மணக்குடவர் உரை:
நகையின் பகுதியார் செய்த நட்பினும், பகைவராலே பத்துக்கோடி மடங்கு நன்மை மிகும். நகைவகையர்- காமுகர், வேழம்பர் முதலாயினார். இஃது இவர்கள் நட்புத் தீதென்றது.
பரிமேலழகர் உரை:
நகை வகையர் ஆகிய நட்பின் -தாம் அறிதல் வகையாகாது நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல. (நட்பு : ஆகுபெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறு கொள உரைத்தார்.)