குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : நட்பியல். அதிகாரம் : நட்பாராய்தல்.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
Translation:
Temper, descent, defects, associations free
From blame: know these, then let the man be
friend to thee.
Explanation:
Make friendship (with one) after
ascertaining (his) character, birth, defects and the whole of one's relations.
கலைஞர் உரை:
குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும் குற்றத்தையும் குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனேடு நட்புக் கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
மணக்குடவர் உரை:
ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம்.
பரிமேலழகர் உரை:
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்து - ஒருவன் குணத்தினையும் குடிப்பிறப்பினையும் குற்றத்தினையும் குறைவற்ற சுற்றத்தினையும் ஆராய்ந்தறிந்து; நட்பு யாக்க -அவனோடு நட்புச் செய்க. (குற்றமில்லாதார் உலகத்து இன்மையின் உள்ளது பொறுக்கப்படுவதாயின் அவர் நட்பு விடற்பாற்றன்று என்பார், 'குற்றமும்' என்றும், சுற்றப் பிணிப்புடையார் நட்டாரோடும் பிணிப்புண்டு வருதலின் 'குன்றா இனனும்' என்றும், விடப்படின் தம் குறையாம் என்பார் 'அறிந்து யாக்க' என்றும் கூறினார்.)