Thirukural 776 of 1330 - திருக்குறள் 776 of 1330


Thirukural 776 of 1330 - திருக்குறள் 776 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : படையில். அதிகாரம் : படைச்செருக்கு.

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

Translation:

The heroes, counting up their days, set down as vain
Each day when they no glorious wound sustain.

Explanation:

The hero will reckon among wasted days all those on which he had not received severe wounds.

கலைஞர் உரை:

ஒரு வீரன், தான் வாழ்ந்த நாட்களைக் கணக்குப் பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண்படாத நாட்களையெல்லாம் வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான்.

[ads-post]

மு. உரை:

வீரன் தன் கழிந்த நாட்களைக் கணக்கிட்டு, விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன் படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு வீரன் தன் கடந்த நாள்களை எண்ணி எடுத்து, அவற்றுள் முகத்திலும் மார்பிலும் போரின்போது புண்படாத நாள்களைப் பயனில்லாமல் கழிந்த நாள்களாகக் கருதுவான்.

மணக்குடவர் உரை:

தனது வாழ்நாளாகிய நாளையெண்ணி அவற்றுள் விழுமிய புண்படாத நாளெல்லாவற்றையும் தப்பின நாளுள்ளே யெண்ணி வைக்கும் வீரன். இது போரின்கண் முகத்தினும் மார்பினும் புண்படலும், முதுகுபுறங்கொடாமையும் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை:

தன் நாளை எடுத்து - தனக்குச் சென்ற நாள்களையெடுத்து எண்ணி; விழுப்புண் படாத நாளெல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள் விழுப்புண் படாத நாள்களையெல்லாம் பயன்படாது கழிந்த நாளுள்ளே வைக்கும், வீரன் . (விழுப்புண்: முகத்தினும் மார்பினும் பட்ட புண். போர் பெற்றிருக்கவும், அது பெறாத நாள்களோடும் கூட்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊறு அஞ்சாமை கூறப்பட்டது.)

thirukural, kural, thiruvalluvar, valluvar