குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : படையில். அதிகாரம் : படைச்செருக்கு.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
Translation:
At elephant he hurls the dart in hand; for
weapon pressed,
He laughs and plucks the javelin from his
wounded breast.
Explanation:
The hero who after casting the lance in his
hand on an elephant, comes (in search of another) will pluck the one (that
sticks) in his body and laugh (exultingly).
கலைஞர் உரை:
கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.
[ads-post]
மு.வ உரை:
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.
சாலமன் பாப்பையா உரை:
தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன் மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.
மணக்குடவர் உரை:
தன் கையிலுள்ள வேலை ஒரு களிற்றின் உயிரோடே போக்கி, அதன்பின் கருவி தேடிச் செல்பவன் தன் மெய்யின் மேற்பட்ட வேலைப் பறித்துக் கருவி பெற்றே மென்று மகிழும். இது வீரர் செயல் இத்தன்மையாதலால், புண்பட்டால் அதற்காற்றிப் பின்னும் அமரின்கண்சாதல் அல்லது வெல்லல் வேண்டும்என்றது.
பரிமேலழகர் உரை:
கைவேல் களிற்றோடு போக்கி வருபவன் - கைப்படையாய வேலைத் தன்மேல் வந்த களிற்றோடு போக்கி; வருகின்ற களிற்றுக்கு வேல் நாடித்திரிவான்; மெய்வேல் பறியா நகும் - தன் மார்பின்கண் நின்ற வேலைக் கண்டு பறித்து மகிழும். (களிற்றோடு போக்கல் - களிற்றினது உயிரைக் கொடுபோகுமாறு விடுதல். மகிழ்ச்சி, தேடிய தெய்தலான். இதனுள் களிற்றையல்லது எறியான் என்பதூஉம், சினமிகுதியான் வேலிடை போழ்ந்தது அறிந்திலன் என்பதூஉம், பின்னும் போர்மேல் விருப்பினன் என்பதூஉம் பெறப்பட்டன. நூழிலாட்டு. (பு.வெ.மா.தும்பை16)